பாரிய அதிகார துஷ்பிரயோக செயற்பாடுகள் தொடர்பில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசாரணைக் குழு, பிரதிவாதியான பொலிஸ் மா அதிபர் சார்பில் முன்வைக்கப்பட்ட ஆரம்ப ஆட்சேபனைகளை நிராகரித்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையில் நீதியரசர்களான டபிள்யூ.எம்.என்.பி.இத்தவல மற்றும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் ஈ.டபிள்யூ.எம்.லலித் ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய குழு நேற்று (19) பாராளுமன்றத்தில் கூடியதுடன், பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னகோன் முதன்முறையாக விசாரணைக் குழு முன்னிலையில் ஆஜரானார்.
இதன்போது 23 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றப்பத்திரிக்கை பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனிடம் கையளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பிரதிவாதியான பொலிஸ் மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆர்.எஸ்.வீரவிக்ரம மூன்று ஆரம்ப ஆட்சேபனைகளையும் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்தார்.
சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணைக் குழுவில் பங்குபற்றியிருந்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் மற்றும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ராஜித பெரேரா ஆகியோர் இது தொடர்பில் ஆட்சேபனை வெளியிட்டனர்.
அனைத்து உண்மைகளையும் பரிசீலித்த பின்னர், உயர் நீதிமன்ற நீதியரசர் பி.பி.சூரசேன தலைமையிலான விசாரணைக் குழு, பிரதிவாதியான பொலிஸ் மா அதிபர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து பூர்வாங்க ஆட்சேபனைகளையும் நிராகரித்து விசாரணையைத் தொடர முடிவு செய்தது.
அடுத்த விசாரணைக்காக மே 28 அன்று பிற்பகல் 2.00 மணிக்கு கூடுவது என்று குழு முடிவு செய்தது.






3 Comments