கொழும்பு துறைமுக நகர செயற்கை கடற்கரை பகுதியில் நீராடச் சென்று நீரில் மூழ்கி காணாமல்போன கொழும்பு பல்கலைக்கழக மாணவனின் சடலம் நேற்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டது.
இந்த மாணவனின் சடலம் கொழும்பு துறைமுகப் பொலிஸார், கடற்படைப் பிரிவு மற்றும் ரங்கல கடற்படை டைவர்ஸ் ஆகியோர் இணைந்து நேற்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவர் கடலினுள் நீந்திக் கொண்டிருந்த நிலையில் காணாமல் போனது குறித்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சுழியோடிகளின் உதவியுடன் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இந்நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் இந்த மாணவனின் சடலம் கொழும்பு துறைமுக நகர கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டது.
உயிரிழந்த மாணவர் 24 வயதுடையவர் என்றும் அஸ்கிரிய கம்பஹா பகுதியைச் சேர்ந்த இவர் கொழும்பு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்று வந்தவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து கொழும்பு துறைமுகப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments