இலங்கைப் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எனினும், மனுதாரர் கோரியபடி, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்பதற்கும், வாக்களிப்பதற்கும் அர்ச்சுனாவிற்குத் தடை விதிக்கும் இடைக்கால உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்க மறுத்துவிட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பதவியை ரத்து செய்ய கோரி நீதிமன்றில் அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹேரத் இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கொபல்லவ ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
இதில் மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அசோக் பரன், இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்திற்குத் தெரிவான சந்தர்ப்பத்தில் அரச வைத்திய சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் என்பதால், அரசியலமைப்பின் படி அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட தகுதியற்றவர் என்று நீதிமன்றத்தில் வாதிட்டார். எனவே, நாடாளுமன்றத்தில் அமர்ந்து வாக்களிக்க அவருக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்காக ஆஜரான சட்டத்தரணி சேனானி தயாரத்ன, தனது கட்சிக்காரர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது சம்பளம் இன்றி சேவையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்ததால், அவரை ஒரு அரசாங்க ஊழியராகக் கருத முடியாது என்று குறிப்பிட்டார். எனவே, அவர் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு எந்த சட்டத் தடையும் இல்லை என்றும் சட்டத்தரணி வாதிட்டார்.
இரு தரப்பினரும் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளத் தீர்மானித்தது ஆகஸ்ட் 01ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.






3 Comments