வட மாகாண பாடசாலைகளில் பைபிள் நூல்கள் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால் கடுமையான எதிர்ப்பை முன்னெடுப்போம் என இலங்கை சிவசேனை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட சிவத்தொண்டர்கள் சிறீந்திரன் மற்றும் மாதவன், வட மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் பிரட்லியின் நடவடிக்கைகள் மதங்களுக்கு இடையிலான முறுகலை அதிகரிக்கும் வகையில் உள்ளதாக குற்றஞ்சாட்டினர்.
பாடசாலைகளில் இந்து மாணவர்களுக்கு கிறிஸ்தவ மத நூலான பைபிள் வழங்கப்படுவது, மாணவர்களுக்கு மறைமுக அழுத்தமாக அமையக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், இந்த நூல்களை வழங்க அனுமதி கோரியதாகக் கூறப்படும் கிறிஸ்தவ அமைப்பு இலங்கையில் பதிவு செய்யப்பட்டதற்கான தகவல்கள் இல்லை எனவும் கூறப்பட்டது.
சுமார் ஒன்றரை இலட்சம் பைபிள்கள் வட மாகாணத்தில் விநியோகிக்கப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், இதற்கு வட மாகாண ஆளுநரின் தெளிவான அனுமதி இல்லாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பில் ஆளுநருக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டதுடன், பொலிஸாரிடமும் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாடசாலைகளில் வழங்கப்படும் பைபிள்களை பொதுமக்கள் முன்னிலையில் எரித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டிய நிலை ஏற்படும் என சிவசேனை அமைப்பு மேலும் எச்சரித்துள்ளது.






3 Comments