நாடு முழுவதும் நிலவும் கடுமையான வெப்பமான வானிலை காரணமாக, வெப்பம் தொடர்பான நோய்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையை முன்னிட்டு, பாடசாலைகள் மற்றும் பணியிடங்களில் அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் மேற்கொள்ள பொதுமக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டதாவது, சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயாளிகள் இந்த காலநிலையில் நீரிழப்பு, வெப்பத்தாக்கம் மற்றும் தோல் நோய்கள் ஏற்படும் அதிக அபாயத்தில் உள்ளனர்.
அதனால் பாடசாலைகளில் உடற்பயிற்சி மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள் வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் நடத்தப்படாமல், அதிகாலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், வெளியில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு, பணிநேரங்கள் காலை 10.30 மணிக்கு முன்னர் அல்லது பிற்பகல் 3.30 மணிக்குப் பின்னர் மாற்றப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் நேரத்தில் நேரடி சூரிய ஒளியில் வேலை செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்குடன் வீடுகள் மற்றும் பணியிடங்களில் காற்றோட்டத்தை உறுதிப்படுத்த ஜன்னல்கள் மற்றும் கதவுகளைத் திறந்து வைக்க வேண்டும் அல்லது தேவையான இடங்களில் குளிரூட்டும் வசதிகளைப் பயன்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தினமும் குறைந்தது 2.5 லீற்றர் நீர் அருந்த வேண்டும் என்றும், சர்க்கரை பானங்கள், கார்பனேற்றப்பட்ட குளிர்பானங்கள் மற்றும் மதுபானங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடலில் நீர்ச்சத்து போதுமானதா என்பதை சிறுநீரின் நிறத்தைக் கொண்டு கவனிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளியில் செல்லும் போது குடை, தொப்பி அல்லது முழு உடலை மூடும் ஆடைகள் அணிய வேண்டும் எனவும், வாகன ஓட்டிகள் வெயிலில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் ஏறும் முன் ஜன்னல்களைத் திறந்து உள்ளக வெப்பத்தைக் குறைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






3 Comments