நாட்டில் இன்று முதல் மின்சாரக் கட்டணங்களை அதிகரிப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய, வீட்டுப்பாவனை, கைத்தொழில் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்துத் துறைகளுக்கான மின்சாரக் கட்டணங்கள் வெவ்வேறு விகிதங்களில் உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, 30 அலகுகளுக்கு குறைவான மின்சாரப் பாவனைக்கு 4.3 சதவீத உயர்வுடன் ஒரு அலகுக்கான கட்டணம் 15 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 30 முதல் 60 அலகுகள் வரை 6.9 சதவீதம் உயர்த்தப்பட்டு, ஒரு அலகு 45 ரூபாயாக வசூலிக்கப்படும். 61 முதல் 90 அலகுகள் வரை 6.9 சதவீத உயர்வுடன் ஒரு அலகு 120 ரூபாயாக உயர்ந்துள்ளது.
91 முதல் 180 அலகுகள் வரை 7.2 சதவீத கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கான கட்டணம் 420 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோருக்கு அதிகபட்சமாக 25 சதவீத கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கைத்தொழில் துறைக்கு 8.7 சதவீதமும், விருந்தகங்களுக்கு 9.9 சதவீதமும் அரச நிறுவனங்களுக்கு 14.4 சதவீதமும் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
மதஸ்தலங்களைப் பொறுத்தவரை, 180 அலகுகளுக்கு குறைவான மின்சாரப் பாவனைக்கு எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. எனினும், 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் மதஸ்தலங்களுக்கு 9.6 சதவீத கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய மின்னுற்பத்தி செலவுகளை கருத்தில் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.






3 Comments