எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட பாதுகாப்புத் திட்டமொன்றை காவல்துறை தலைமையகம் தயாரித்துள்ளது.
இந்த திட்டம் நாட்டிலுள்ள அனைத்து 608 காவல்துறை நிலையங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யூ. வுட்லர் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு காலத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்கள், வர்த்தக நிலையங்கள் மற்றும் பொது பகுதிகளில் கண்காணிப்பை வலுப்படுத்த விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
மேலும், வாகனச் சோதனைகள் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தலுக்காக 10,000க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் அதிவேக ஓட்டம் போன்ற குற்றங்களை தடுக்கும் நோக்கில் விசேட சோதனைச் சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பாதுகாப்புத் திட்டம், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் ஏப்ரல் மாதம் முழுவதும் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.






3 Comments