வட மாகாணத்தில் அவசர சேவை தேவையை காரணமாகக் கொண்டு 193 ஆசிரியர்களை ஒரே நேரத்தில் இடமாற்றம் செய்வது நிர்வாகக் கொள்கைகளுக்கு முரணானது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி எல்.டி.பி. தெஹிதெனிய, குறித்த இடமாற்ற நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்த மாற்றல் நடவடிக்கை ஸ்தாபன முறைமை அத்தியாயம் 3.2 மற்றும் 11 ஆகிய விதிகளுக்கு முரணானதாகவும், நிறுவப்பட்ட நிர்வாக நடைமுறைகளை மீறுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பொது சேவை ஆணைக்குழு விதிகள் பிரிவு 267 மற்றும் வட மாகாண ஸ்தாபன முறைமையின் கீழ் மேல்முறையீடு செய்யும் சட்ட உரிமை இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், மேல்முறையீடுகள் முறையாக பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும், நடைமுறை நீதி வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தேசிய ஆசிரியர் மாற்றல் கொள்கை (2007/20) படி, மேல்முறையீடு செய்த ஆசிரியர்கள் தீர்வு கிடைக்கும் வரை (ஒரு மாதத்திற்குள்) தற்போதைய பணியிடங்களில் தொடர அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேல்முறையீடுகளை பரிசீலிக்காமல் ஆசிரியர்களை தங்கள் பணியிடங்களை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியதாகவும், புதிய நிலையத்தில் பணியில் சேர்ந்த பின்னரே மேல்முறையீடுகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது.






3 Comments