கடலட்டை (Sea cucumber) பண்ணைகள் விரிவுபடுத்தப்படும் நிலையில், அவற்றின் உரிமையாளர்களாகவும் பயனாளர்களாகவும் குறித்த பிரதேச மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் இதனை தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் முதலீட்டாளர்கள் அல்லது ஏற்றுமதியாளர்கள் என்ற பெயரில் வெளியாரால் தமிழர் பகுதிகளின் வளங்களும் வருமானங்களும் வெளியேற்றப்படக்கூடிய சூழல் உருவாகக்கூடாது என அவர் எச்சரித்தார்.
இந்த நிலைப்பாட்டை பிரதேசவாதம், இனவாதம் அல்லது தேசியவாதம் என யாரும் தவறாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த பல தசாப்தங்களாக பாதிப்புகளை சந்தித்து பின்தள்ளப்பட்டுள்ள தமிழ் மக்களின் பொருளாதார முன்னேற்றம் உறுதிசெய்யப்பட வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
தமிழர் பிரதேசங்களில் உள்ள இயற்கை வளங்களை அதிகபட்சமாக அப்பகுதி மக்களே பயன்படுத்த வேண்டும் என்பது கட்சியின் நிலைப்பாடு என அவர் தெரிவித்தார்.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோது அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும், தென்னிலங்கை அல்லது வெளியாரை முதலீட்டாளர்களாக அனுமதித்தால், வருமானத்தின் பெரும் பகுதி அப்பகுதியை விட்டு வெளியேறி, உள்ளூர் மக்களுக்கு குறைந்த பலனே கிடைக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், பூகோள அரசியல் ஆதிக்கத்திற்காக தமிழர் நிலப்பகுதிகள் பயன்படுத்தப்படக்கூடிய அபாயமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.






3 Comments