அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கரடி பொம்மைக்குள் மறைத்து கொரியர் சேவையின் மூலம் கடத்தி வரப்பட்ட “ஐஸ்” போதைப்பொருளுடன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புதன்கிழமை (8) மாலை மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, சந்தேக நபர் பயன்படுத்திய பல இடங்களில் விசாரணைகள் நடத்தப்பட்டன. அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரான 43 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். அவர் பெற்றிருந்த கொரியர் பொதியில் உள்ள கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 107 கிராம் “ஐஸ்” போதைப்பொருள் மீட்கப்பட்டது.
மேலும் இலத்திரனியல் தராசு, இரண்டு கைத்தொலைபேசிகள் மற்றும் பணத் தொகையும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதுடன், கைதான சந்தேக நபரை இன்று (9) கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.






3 Comments