இலங்கையின் வரலாற்றில் மிகவும் துயரமான நாள்களில் ஒன்றாகக் கருதப்படும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் நினைவு நாள் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
2019 ஆம் ஆண்டு இதே தினத்தில், உயிர்த்த ஞாயிறு திருநாளன்று, நாட்டின் பல பகுதிகளில் ஒரே நேரத்தில் இடம்பெற்ற தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் உலகையே அதிர்ச்சியடையச் செய்தன.
கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களும் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் ஆறு முக்கிய இடங்களில் வெடிப்புகள் நிகழ்ந்தன.
இந்த தாக்குதல்களில் சுமார் 269 பேர் உயிரிழந்ததுடன், 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் இதில் பாதிக்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு தொடர்புடையதாக கருதப்படும் அமைப்புகள் மற்றும் சர்வதேச தொடர்புகள் குறித்து விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று நாடு முழுவதும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. காலை 8:45 மணிக்கு இரண்டு நிமிட மௌனம் அனுஷ்டிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய நினைவேந்தல் நிகழ்வு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நடைபெறுகிறது இதனை முன்னிட்டு அந்த பகுதியில் விசேட போக்குவரத்து கட்டுப்பாடுகள் இன்று காலை 7 மணி முதல் நிகழ்வு முடியும் வரை அமலில் இருக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது மேலும் தேவாலயங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.






3 Comments