2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களுடன் தொடர்புடைய விசாரணைகளில் புதிய தகவல்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில், பயங்கரவாத ஆய்வாளர் பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை மூன்று முறை நேரில் சந்தித்ததாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்த சந்திப்புகளுக்கு அவர் இரு பெண்களுடன் சென்றதாகவும், அவர்களில் ஒருவர் பின்னர் இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவிக்கு நியமிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோர் பிள்ளையானின் சிறை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக, பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர்கள் மூவரும் உரையாடிக் கொண்டிருந்தபோது, யாரேனும் அருகில் வந்தால் உரையாடலை மாற்றுவதாகவும் சாட்சியாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் சந்தேகநபராகக் கைது செய்யப்பட்ட பிள்ளையான், 2015 முதல் 2021 வரை மட்டக்களப்பு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த காலப்பகுதிக்குள் குறித்த சந்திப்புகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.
இதனுடன் தொடர்புடையதாக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி உள்ளிட்ட மூவர் குறித்து மேலதிக விசாரணை அறிக்கையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வனைத்தும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தகவல்கள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில் உள்ளதாகும்; இறுதி தீர்ப்பு இதுவரை வழங்கப்படவில்லை.






3 Comments