நவீன தொழில்நுட்பத்தை ஒருங்கிணைப்பதன் மூலம் நாட்டின் கடற்றொழில் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்தும் நோக்கில், இலங்கை நோர்வேயுடன் முக்கிய ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது.
நோர்வேக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த கடற்றொழில், நீரியல் மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையிலான தூதுக்குழு, ஏப்ரல் 23 ஆம் திகதி ஒஸ்லோவில் நோர்வே வர்த்தக, கைத்தொழில் மற்றும் கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுடன் உயர்மட்ட கலந்துரையாடல்களை நடத்தியது.
இந்த கலந்துரையாடல்களில், இலங்கையின் மீன்பிடித் துறையை நவீனமயமாக்குதல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவ பரிமாற்றம் முக்கியமாக கவனம் பெற்றன.
நோர்வே அரசின் “நீல நீதி” (Blue Justice) முன்முயற்சியின் தலைவர் குன்னர் ஸ்டோல்ஸ்விக் உடனான சந்திப்பில், செயற்கைக்கோள் அடிப்படையிலான கப்பல் கண்காணிப்பு அமைப்பு (AIS தரவு) தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. மீன்பிடி படகுகளை கண்காணிக்கவும், சட்டவிரோத, அறிவிக்கப்படாத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத (IUU) மீன்பிடியை கட்டுப்படுத்தவும் இலங்கைக்கு இந்த தொழில்நுட்பத்தை இலவசமாகப் பெறும் வாய்ப்பு குறித்து ஆராயப்பட்டது.
மேலும், இந்த அமைப்பை திறம்பட பயன்படுத்துவதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு நோர்வே தரப்பால் விசேட பயிற்சி வழங்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான உலகளாவிய அமைப்புகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், மீன் பொருட்களின் தரம் மற்றும் ஊட்டச்சத்து மதிப்பை மேம்படுத்தும் வழிமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தேசிய நீர்வாழ் வளங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிலையம் (NARA) உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சர்வதேச அறிவு மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றத்திற்கான வாய்ப்புகளை வழங்கும் உலகளாவிய முயற்சியில் இலங்கை இணைவதற்கான அழைப்பையும் பெற்றுள்ளது.
அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், இந்த ஒத்துழைப்பு இலங்கையின் மீன்பிடித் துறையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் முக்கியமான படியாக அமையும் என தெரிவித்துள்ளார்.






3 Comments