நாகப்பட்டினம் மாவட்டம் செருதூரில் இருந்து கடந்த 25ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குழுவினர், 26ஆம் தேதி இரவு ஆற்காட்டுத்துறைக்கு தென்கிழக்கே சுமார் 9 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு ஸ்பீடு பைபர் படகில் வந்த மூன்று பேர், செருதூர் மீனவர்கள் விரித்திருந்த வலைகளை அறுக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் போது அந்த படகில் வந்த இரண்டு பேர் தப்பிச் சென்ற நிலையில், ஒருவர் மீனவர்களால் பிடிக்கப்பட்டுள்ளார்.
பிடிபட்டவர் இலங்கையின் காங்கேசன்துறை, ஏழாலை பகுதியைச் சேர்ந்த அயந்தன் (27) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தமிழ் மொழியில் பேசியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பின்னர் அவரை செருதூர் மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்துள்ளனர். மோதலில் அவருக்கு கண் புருவம் தலையில் காயம் மற்றும் நெற்றியில் வீக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து அவர் நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் கீழையூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






3 Comments