ஏஹி பஸ்சிகோ (Ehi Passiko) சர்வதேச அமைதி நடைபயணத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று (28) கொழும்பில் நடைபெறுகின்றன.
இன்று நண்பகல் 12:00 மணிக்கு களனி ரஜமகா விகாரையிலிருந்து ஆரம்பமாகும் நடைபயணம், சுதந்திர சதுக்கத்தை நோக்கி பயணிக்கவுள்ளது.
அதனைத் தொடர்ந்து, மாலை 05:30 மணிக்கு சுதந்திர சதுக்கத்திலிருந்து மீண்டும் ஆரம்பமாகும் நடைபயணம், கொழும்பு கங்காராம விகாரையை சென்றடைந்ததும் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாலை 04:00 மணிக்கு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் விசேட அரச விழா நடைபெறவுள்ளது.
இதன்போது, வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் உள்ளிட்ட குழுவினரிடம் ஸ்ரீ மகா போதியின் அன்குர கன்று ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
உலகிற்கு அமைதிச் செய்தியை கொண்டு செல்லும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடைபயணம், கடந்த 22ஆம் திகதி தம்புள்ளையில் தொடங்கியது. நேற்று யக்கலையிலிருந்து களனி ரஜமகா விகாரை வரை நடைபயணம் முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வை முன்னிட்டு, இன்று கொழும்பின் பல பகுதிகளில் விசேட போக்குவரத்துத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முற்பகல் 11:00 மணி முதல் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமலுக்கு வரும் எனவும், பண்டாரநாயக்க சுற்றுவட்டம் முதல் பேஸ்லைன் வீதி ஊடாக பொரளை சந்தி வரையான பகுதிகள் மற்றும் கங்காராம விகாரையைச் சூழவுள்ள வீதிகளில் வாகனப் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments