ஈரான் தொடர்பான போர் பதற்றத்தால் ஏற்பட்ட விநியோகத் தடைகள் காரணமாக சவூதி அரேபியாவின் ஒரே ஒரு உத்தியோகபூர்வ மதுபான விற்பனை நிலையத்தில் கடும் தட்டுப்பாடு நிலவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரியாத் நகரின் இராஜதந்திரப் பகுதியில் அமைந்துள்ள, பெயர்ப் பலகையற்ற இந்த விற்பனை நிலையம் 2024ஆம் ஆண்டு முஸ்லிம் அல்லாத இராஜதந்திரிகளுக்காகத் தொடங்கப்பட்டது. பின்னர் வசதி படைத்த முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு குடியிருப்பாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது.
1952ஆம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவில் மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், வெளிநாட்டவர்களை ஈர்க்கும் நோக்கில் இந்த ஒரே நிலையத்திற்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள விநியோகத் தடையால் பீர், வைன், டெகிலா உள்ளிட்ட பானங்கள் தட்டுப்பாட்டில் உள்ளன. அதிக விலை அல்லது குறைவாக அறியப்பட்ட வகைகள் மட்டுமே விற்பனைக்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் விற்பனை நிலையத்துக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன. பகல் நேரங்களிலேயே வெளிநாட்டவர்கள் மதுபானங்களை வாங்க முயல்வதால் வாக்குவாதங்களும் மோதல்களும் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வர வேண்டிய சரக்குக் கப்பல்கள், ஈரான் தொடர்பான போர் பதற்றம் காரணமாக தாமதமாவதே இந்தத் தட்டுப்பாட்டிற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.






3 Comments