அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக 10 லட்சம் நுழைவுச்சீட்டுக்கள் வெறும் 28 அமெரிக்க டொலர்கள், சுமார் 8,500 ரூபாய் என்ற மிக குறைந்த விலையில் விற்கப்படவுள்ளது. மொத்த நுழைவுச்சீட்டுகளில் மூன்றில் ஒரு பகுதி 100 டொலருக்கும் குறைவான விலையிலேயே கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆர்வமுள்ள விளையாட்டு ரசிகர்கள் ஜனவரி 14 முதல் மார்ச் 18, 2026 வரை அதிகாரப்பூர்வ இணையதளம் tickets.la28.org மூலம் பதிவு செய்யலாம். இது ஒரு ‘சீரற்ற குலுக்கல்’ முறை, எனவே முன்கூட்டியே பதிவு செய்தாலும் எந்த முன்னுரிமையும் கிடையாது. மார்ச் 18க்குள் பதிவு செய்த அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும்.
குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஏப்ரல் மாதம் மின்னஞ்சல் மூலம் அறிவிக்கப்பட்டு, நுழைவுச்சீட்டுகள் வாங்க ஒரு குறிப்பிட்ட நேர ஒதுக்கீடு வழங்கப்படும்.
தொடக்க விழா மற்றும் தடகளப் போட்டிகள் – LA மெமோரியல் கொலிசியம் மைதானத்தில் நடைபெறவுள்ளன, ஆனால் படகுப் போட்டிகள் ஒக்லஹோமா நகரில் மட்டுமே நடைபெறும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பராலிம்பிக் நுழைவுச்சீட்டுகள் 2027 ஆம் ஆண்டு விற்பனைக்கு வரும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.






3 Comments