இமயமலைப் பகுதிகளில் உருவாகியுள்ள பனிச்சிகர ஏரிகள் உடையும் பட்சத்தில், இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர், லடாக், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய 6 மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இமயமலைச் சிகரங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகுவதால் அப்பகுதிகளில் பெரிய ஏரிகள் உருவாகின்றன. இந்த ஏரிகளில் பனிப்பாறைகள் அல்லது பனிமலைத் துண்டுகள் விழும்போது, நீர்மட்டம் திடீரென அதிகரித்து ஏரிகள் உடைந்து பெருவெள்ளம் ஏற்படக்கூடும்.
தற்போது இமயமலைப் பகுதியில் உருவாகியுள்ள 88 பனிச்சிகர ஏரிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிக்கிம் இமயமலைப் பகுதியில் ஆபத்தானதாகக் கருதப்படும் 16 பனிச்சிகரங்களில் அண்மையில் எச்சரிக்கை கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், 13 பனிச்சிகர ஏரிகளிலும் கண்காணிப்பு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோவிந்த் மோகன் தலைமையில் புதுடெல்லியில் நேற்று உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர் ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம், புவியியல் ஆய்வு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இமயமலைப் பகுதிகளில் உருவாகியுள்ள பனிச்சிகர ஏரிகள் உடைந்தால் எந்தெந்த நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெள்ளம் ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய அவசர நடவடிக்கைகள் மற்றும் ஆபத்தான நதிப் பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு முன்கூட்டியே வெளியேற்றுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய கோவிந்த் மோகன், பனிச்சிகர ஏரிகள் உடைவது அல்லது பனிமலைகள் சரிவது போன்ற சம்பவங்களால் பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். இதனைத் தடுக்க சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் நவீன தொழில்நுட்பங்களை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெருவெள்ளம் ஏற்படக்கூடிய பகுதிகளில் மாவட்ட நிர்வாகங்கள் மிகுந்த விழிப்புடன் செயல்பட வேண்டும் என்றும், பேரிடர் ஏற்படும் முன்னரே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
பனிச்சிகர ஏரிகளால் ஏற்படக்கூடிய அபாயங்களை எதிர்கொள்வதற்காக மத்திய அரசு கடந்த 2024ஆம் ஆண்டு சிறப்பு திட்டமொன்றை அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பணிகளை இமயமலைப் பகுதி மாநில அரசுகள் விரைவுபடுத்த வேண்டும் என்றும் கோவிந்த் மோகன் கேட்டுக்கொண்டார்.
இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும் போது உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார சேதங்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்கு மாநில அரசுகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.






3 Comments