காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Belonging’ வரும் நவம்பர் 10ஆம் தேதி ஹார்ப்பர்காலின்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்படவுள்ளது.
சோனியா காந்தியின் குழந்தைப் பருவம், திருமண வாழ்க்கை, கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை மற்றும் அவரது அரசியல் பிரவேசம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த நூலை வெளியிடுவதாக இருந்த பெங்குயின் ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் ஒப்பந்தத்தில் இருந்து விலகியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் நரேந்திர மோடி, ஆர்.எஸ்.எஸ். மற்றும் சீன ஆக்கிரமிப்பு தொடர்பான பகுதிகளை நீக்குவதற்கு அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதனை அவர் “ஜனநாயகப் படுகொலை” என விமர்சித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டை பாஜக தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி மறுத்துள்ளார். ஒரு நூல் சுயசரிதையா அல்லது புனைகதையா என்பதை பதிப்பகமே தீர்மானிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பதிப்பகத் திருத்தப் பணிகளின்போது குறிப்பிட்ட ஒரு விவகாரம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, சோனியா காந்தி தரப்பினரே ஒப்பந்தத்தைத் திரும்பப் பெற்றதாக பெங்குயின் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
மேலும், ஒப்பந்த விதிமுறைகள் மற்றும் ஆசிரியரின் ரகசியத்தன்மையைப் பாதுகாக்க வேண்டிய கடமை காரணமாக, அந்த கருத்து வேறுபாட்டுக்கான காரணங்களைத் தங்களால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாது என்றும் பெங்குயின் நிறுவனம் கூறியுள்ளது.
இதையடுத்து, பெரும் அரசியல் சர்ச்சைக்கு மத்தியில் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூல் ‘Belonging’ தற்போது ஹார்ப்பர்காலின்ஸ் மூலம் வெளியிடப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.






3 Comments