கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் நேக்கி புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததோடு, விடுதி மற்றும் அருகில் உள்ளவர்கள் 19 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதனால் மொத்தம் 260 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. இந்தக் குழு விசாரணை அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ள நிலையில், முதற்கட்ட அறிக்கையின்படி, விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேயே எஞ்சின்களுக்கான எரிபொருள் விநியோகம் தடைபட்டதே விபத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விமானத்தின் இரண்டு என்ஜின்களும் செயலிழந்தன.
மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் விமானிகள் பேசிக்கொண்ட தகவல்களும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. ஒரு விமானி தனது சக விமானியிடம் "எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்?" என்று கேட்டுள்ளார். அதற்கு மற்றொரு விமானி "நான் அந்த வால்வை அடைக்கவில்லை" என்று பதிலளித்துள்ளார்
எவ்வாறாயினும் ,இரண்டு என்ஜின்களும் செயலிழந்த நிலையில், RAT (Ram Air Turbine) அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சிக்கப்பட்டுள்ளது. அப்போது எரிபொருள் செல்லும் இரண்டு வால்வுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கி, ஒரு என்ஜின் மட்டுமே இயங்கியுள்ளது. இதனால் விமானம் மேலே செல்ல முடியாமல் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.
கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முழுவதுமாக சேதமடைய காரணம் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியான நிலையில் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது.






3 Comments