மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சி வரும் நிலையில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் சுற்றுப்பயணமாக அந்தமானிலிருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையம் வருகிறார். விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டைக்கு செல்லும் அவர், திருச்சி சாலையில் உள்ள பாலன் நகர் பள்ளத்திவயல் பகுதியில் நடைபெறவுள்ள பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் ‘தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பிரசாரப் பயணத்தின் நிறைவு விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
பின்னர் சாலை வழியாக திருச்சிக்கு வரும் அவர், ஆட்சியர் அலுவலக சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தேர்தல் பரப்புரை, தேர்தல் வியூகம், தமிழக அரசியலின் தற்போதைய நிலை, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
பின்னர், நாளை காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார். தொடர்ந்து, மன்னார்புரத்தில் நடைபெறும் ‘மோடி பொங்கல் விழா’- வில் பங்கேற்கிறார். இதையடுத்து பகல் 1:20 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, அங்கிருந்து புதுடெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அமித்ஷாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அமித்ஷா வருகையை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்கள் முழுவதும் மத்திய மண்டல ஐஜி தலைமையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அமித்ஷா வருகையை முன்னிட்டு திருச்சி, புதுக்கோட்டையில் அவர் பயணம் செய்யும் சாலை வழிகள், விமான நிலைய சுற்றுப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.






3 Comments