ஈரானில் நிலவி வரும் உள்நாட்டுப் போராட்டங்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக,
அங்கு வசித்து வரும் இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர, மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
இதன் முதற்கட்டமாக ஈரானில் உள்ள இந்தியர்கள் விமானங்கள் மூலம் உடனடியாக வெளியேற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நிலைமை மேலும் மோசமடைந்தால் இந்தியர்களை மீட்க இந்திய விமானப்படை மற்றும் இந்தியக் கடற்படையின் கப்பல்கள் மற்றும் விமானங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே தெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் ஈரானில் வசித்து வரும் இந்தியர்கள் அங்கு கிடைக்கும் எந்தவொரு போக்குவரத்து வசதியையும் பயன்படுத்தியாவது,
உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
மேலும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்,
ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலை மற்றும் தற்போதைய ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில் இதுவரை ஏராளமானோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலை ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பதற்றத்தையும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது இதனையடுத்து,மறு உத்தரவு வரும் வரை இந்தியக் குடிமக்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு
மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.






3 Comments