ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ள ஹோர்முஸ் நீரிணை தற்போது ஒரு அபாயகரமான போர்க்களமாக மாறியுள்ளது.
ஈரானின் ஏவுகணைகள், ஆளில்லா வானூர்திகள் மற்றும் கண்ணிவெடி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், கிரேக்கத்தைச் சேர்ந்த சில கப்பல் நிறுவனங்கள் மசகு எண்ணெய் மற்றும் சரக்குக் கப்பல்களை இந்த நீர்ப்பாதை வழியாகத் துணிகரமாகச் செலுத்தி வருகின்றன.
உயிருக்கு ஆபத்து இருந்தாலும், ஒரு நாளைக்கு 5 இலட்சம் டொலர் வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பு இருப்பதால், இந்தக் கப்பல் உரிமையாளர்கள் இந்த ஆபத்தான பயணத்தில் இறங்கியுள்ளனர்.
கடந்த பெப்ரவரி 28 முதல் இதுவரை குறைந்தது 10 கிரேக்கக் கப்பல்களும், 2 சீனக் கப்பல்களும் இந்தச் நீரிணையைக் கடந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஈரானியப் படைகள் இதுவரை 16 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ள நிலையிலும், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், "துணிச்சலாகச் செயல்படுங்கள், பயப்படத் தேவையில்லை" என்று கப்பல் நிறுவனங்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
ஆனால், பாதுகாப்பு அபாயம் அதிகம் இருப்பதால் கப்பல்களுக்குப் பாதுகாப்பாக வர அமெரிக்கக் கடற்படை மறுத்துவிட்டது.
தங்கள் கப்பல்களைக் காட்டிக் கொடுக்காமல் இருக்க, ஜிபிஎஸ் கருவிகளை அணைத்துவிட்டு இரவில் திருட்டுத்தனமாகப் பயணிக்கும் இந்த முறை, "ஊழியர்களின் உயிரோடு விளையாடும் ஒரு ஆபத்தான விளையாட்டு" என சர்வதேசப் போக்குவரத்துத் தொழிலாளர் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெயியிட்டுள்ளது.






3 Comments