அமெரிக்கப் படைகள் ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) கடற்படை ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பதிலடி தாக்குதல்களை நடத்தியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
IRGC கடற்படையின் கூற்றுப்படி, ஹோர்முஸ் நீரிணையில் பயணித்த 3 எண்ணெய்க் கப்பல்களும், மேலும் 3 அமெரிக்கத் தொடர்புடைய கப்பல்களும் இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளன. அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) 3 ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் மீது அமெரிக்கப் படைகள் தாக்குதல் நடத்தியதாக அறிவித்திருந்தது. அவற்றில் இரண்டு கப்பல்கள் நிரந்தரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும், மற்றொரு கப்பல் அழிக்கப்பட்டதாகவும் அமெரிக்கத் தரப்பு கூறியுள்ளது.
மேலும், ஈரானிய புரட்சிகர காவல்படை அமெரிக்க விமானந்தாங்கிக் கப்பல் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை destroyer மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்துள்ளது. எனினும், அமெரிக்கத் தரப்பின்படி அந்தக் கப்பல்கள் ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து தப்பியதுடன், அமெரிக்க வீரர்கள் எவரும் உயிரிழக்கவில்லை.
இந்நிலையில், 3 அமெரிக்கக் கப்பல்கள் தாக்கப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ள தகவல் இதுவரை சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இரு தரப்பினரும் தொடர்ச்சியாக பதிலடி எச்சரிக்கைகளை விடுத்து வருவதால், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து மற்றும் சர்வதேச எண்ணெய் விநியோகம் தொடர்பான அச்சம் மேலும் அதிகரித்துள்ளது.






3 Comments