ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் நிலவி வரும் பதற்றநிலையால் எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் கூட்டுப்படைகள் மற்றும் ஈரான் இடையிலான மோதல் காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா நோக்கி வரும் எரிவாயு கப்பல்களுக்கு இந்திய கடற்படை பாதுகாப்பு வழங்கி வருகிறது. “ஜக் வசந்த்” மற்றும் “பைன் காஸ்” எனும் இரண்டு எல்.பி.ஜி கப்பல்கள் ஈரான் ராணுவத்தின் சிறப்பு அனுமதியுடன் ஜலசந்தியை கடந்து சர்வதேச கடல் எல்லையை அடைந்துள்ளன. இக்கப்பல்கள் தற்போது இந்திய கடற்படையின் பாதுகாப்பில் இந்தியா நோக்கி பயணம் மேற்கொண்டு வருகின்றன.
இந்த இரண்டு கப்பல்களிலும் மொத்தம் 92,700 மெட்ரிக் டன் எல்.பி.ஜி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மார்ச் 26 முதல் 28 ஆம் தேதிக்குள் இக்கப்பல்கள் இந்தியா வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன்னர் வளைகுடா நாடுகளில் இருந்து இரண்டு எரிவாயு கப்பல்கள் இந்தியா வந்துள்ளன. மேலும் நெதர்லாந்து நாட்டிலிருந்து “ஹெலாஸ் கிளாடியேட்டர்” மற்றும் அமெரிக்கா நாட்டிலிருந்து “காஸ் ஜுபிட்டர்” ஆகிய கப்பல்கள் தலா 24,000 டன் எல்.பி.ஜி ஏற்றி இந்தியா நோக்கி வருகின்றன. இவை மார்ச் 30 ஆம் தேதி விசாகப்பட்டினம் துறைமுகம் வந்தடையும் என கூறப்படுகிறது.
இதற்கிடையில், சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 55,000 டன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மேலும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா பகுதியில் பணியில் உள்ள இந்தியாவின் 12க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து வரும் இந்திய கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன.






3 Comments