இந்த வாரத்திற்குள் ஈரானுடன் நேரடிப் பேச்சுவார்த்தைகள் நடைபெறும் என அமெரிக்கா அறிவித்துள்ளது இது தொடர்பான எதிர்பார்ப்பை அமெரிக்காவின் மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் வெளியிட்டுள்ளார்.
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக அமெரிக்கா 15 அம்சங்கள் கொண்ட அமைதித் திட்டத்தை முன்வைத்துள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கத்தின் மத்தியஸ்தம் மூலம் இந்தத் திட்டம் ஈரானிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கு ஈரான் விரைவில் பதிலளிக்கும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் விட்காஃப் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ட்ரம்ப் ஒரு நிரந்தர அமைதி உடன்படிக்கையை விரும்பினாலும் அது பலவீனமான நிலையில் இருந்து அல்லாமல் வலிமை மூலம் அமைதி என்ற கொள்கையின் அடிப்படையிலேயே எட்டப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக விட்காஃப் கூறியுள்ளார்.
இந்தத் தீர்வின் முக்கிய அங்கமாக ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்குவதைத் தடுத்தல் மற்றும் அணுக்கரு செறிவூட்டலை முற்றிலுமாகத் தவிர்த்தல் ஆகியவற்றை அமெரிக்கா வலியுறுத்துகிறது.
மத்திய கிழக்கில் மற்றொரு வடகொரியா உருவாவதை அனுமதிக்க முடியாது என்றும் அணு ஆயுதங்கள் இல்லாத சூழலே பிராந்திய பாதுகாப்பிற்கு அவசியம் என்றும் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.






3 Comments