நேபாளத்தில் இளையதலைமுறையினர் பயன்படுத்தும் டிக் - டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்நாட்டில் அரசியல் தலைவர்கள் கடுமையான ஊழலில் ஈடுபட்டதாக கூறி ஜென் - சி எனப்படும் இளைய தலைமுறையினர் கடந்த செப்டம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் போது அந்நாட்டின் பிரதமர் அலுவலகம், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளிட்டவற்றுக்கு தீ வைக்கப்பட்டது.
நாட்டின் அப்போதைய பிரதமராக இருந்த கே.பி.சர்மா ஒலி உள்ளிட்ட அரசியல் தலைவர்களின் வீடுகள் போராட்டகாரர்களால் சூறையாடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகளில் 70-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிரதமர் கே.பி.சர்மா ஒலி, பதவி விலகுவதாக அறிவித்ததை தொடர்ந்து ஆட்சி கவிழ்ந்தது.
மார்ச் 5-ஆம் தேதி பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றது. இதில், முன்னாள் மேயரான பலேந்திரஷா வெற்றி பெற்று அந்நாட்டின் 47-வது பிரதமராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார். இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற ஜென் - சி போராட்டம் தொடர்பாக நேபாள முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கும் கைது செய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஓம் அதிகாரி தெரிவித்துள்ளார். முன்னாள் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கௌரி பகதூர் கார்க்கி தலைமையிலான ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டதாக 'காத்மாண்டு போஸ்ட்' செய்தி வெளியிட்டுள்ளது.
பலேந்திரஷா, நேபாள பிரதமராகப் பதவியேற்ற மறுநாளே இந்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போதைய உள்துறை அமைச்சர் சுதன் குருங், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டதாவது, "வாக்குறுதி என்பது வாக்குறுதிதான். சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை. முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் பதவியில் இருந்து விலகிய உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக்கை நாங்கள் எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம். இது யாருக்கும் எதிரான பழிவாங்கும் நடவடிக்கை அல்ல, நீதிக்கான ஆரம்பம் மட்டுமே. இனி இந்த நாடு ஒரு புதிய திசையில் பயணிக்கும் என்று நான் நம்புகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.






3 Comments