ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இராணுவத் தாக்குதல்களால் உருவான பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் உத்தியோகபூர்வ சீனா விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
முன்னதாக மார்ச் 31 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெறவிருந்த இந்த விஜயம், தற்போது மே 14 மற்றும் 15 ஆம் திகதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் முக்கிய நோக்கம், 2025 ஆம் ஆண்டின் இறுதியில் தணிந்திருந்த வர்த்தகப் போர் மற்றும் வரி விதிப்பு (Tariffs) தொடர்பான விவகாரங்களை, சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் உடன் நேரடியாக கலந்துரையாடுவதாகும்.
இது, ட்ரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் மேற்கொள்ளப்படும் முதல் சீனா விஜயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் அவர் 2017 ஆம் ஆண்டு சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார்.
இந்நிலையில், தற்போதைய போர்ச் சூழல் குறித்து கருத்து வெளியிட்ட சீனா, ஈரான் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கடுமையாகக் கண்டித்துள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட தரப்புகள் உடனடியாக போர் நடவடிக்கைகளை நிறுத்தி, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.






3 Comments