கிரிமியாவில் ரஷ்யாவின் அன்டோனோவ்-26 ரக இராணுவ போக்குவரத்து வானூர்தி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ரொய்டர்ஸ் ஊடகத்தின் தகவலின்படி, மார்ச் 31 அன்று மொஸ்கோ நேரப்படி மாலை 6 மணியளவில் கிரிமியன் தீபகற்ப வான்பரப்பில் பறந்த வானூர்தி கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.
முன்னெடுக்கப்பட்ட தீவிர தேடுதல் நடவடிக்கைகளின் முடிவில் விபத்துக்குள்ளான சிதைந்த பாகங்கள் கண்டறியப்பட்டன. விபத்துக்குள்ளான வானூர்தியில் 6 விமானப் பணியாளர்கள் மற்றும் 23 பயணிகள் பயணித்தனர்; அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் முதற்கட்ட அறிக்கையின் படி, ஏவுகணைத் தாக்குதல்களோ அல்லது வெளிப்புறச் சூழல் காரணங்களோ எந்த அறிகுறிகளும் இல்லை. இதனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்து ஏற்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.
விபத்து தொடர்பாக விரிவான விசாரணைகளை மேற்கொள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டு, சம்பவ இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அண்மைய நாட்களாக வான்வழிப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்ய இராணுவ வானூர்தி விபத்துக்குள்ளாகியிருப்பது சர்வதேச அளவில் பெரும் கவனத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.






3 Comments