ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்ற வெள்ளை மாளிகை அறிவிப்புக்கு, ஈரான் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும், போர்நிறுத்தத்தை ஆதரிக்கிறதா அல்லது இஸ்ரேல் மூலம் தொடரும் போரை ஆதரிக்கிறதா என்பதைத் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். “இரண்டையும் ஒரே நேரத்தில் செய்ய முடியாது” எனவும் தெரிவித்துள்ளார்.
லெபனானில் நடைபெறும் இஸ்ரேலின் தாக்குதல்களை உலகம் கவனித்து வருவதாகவும், அமெரிக்கா தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா என்பதை சர்வதேச சமூகம் உற்றுநோக்கிக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேச்சுவார்த்தை நிபந்தனைகளில் லெபனான் மீதான தாக்குதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் வாதிட்டுள்ளார்.
ஆனால், வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் “லெபனான் இந்தப் போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல” என்று தெரிவித்திருந்தார். இதனால், அமெரிக்கா தனது உறுதிமொழிகளில் இருந்து பின்வாங்குவதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
இஸ்லாமாபாத் நகரில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்படும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், லெபனான் உட்பட அனைத்து பகுதிகளிலும் போர்நிறுத்தம் அமலாகும் என முன்னதாக தெரிவித்திருந்தார். எனினும், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு பேச்சுவார்த்தையில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படாவிட்டால், போர்நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
இதேவேளை, லெபனான் மீதான தாக்குதல்களுக்கு பதிலடியாக ஹோர்முஸ் நீரிணை மீண்டும் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது நிலைமையை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.






3 Comments