அமெரிக்கா முன்வைத்த திட்டமே பேச்சுவார்த்தைக்கு பொருத்தமானது என்றும், ஈரான் முன்வைத்த 10 அம்சத் திட்டம் அடிப்படைத் தன்மையற்றது என்றும் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் ஹோர்முஸ் நீரிணை உடனடியாக எந்தத் தடையும் இன்றி திறக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார். இரு வார போர்நிறுத்த காலத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால், அந்த நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடைபெறுவது அவசியம் என அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
மேலும், தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்கு பொருந்தாது என்றும், அது தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட தரப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் லீவிட் குறிப்பிட்டார். இதனால், இஸ்ரேல் லெபனானில் தனது தாக்குதல்களைத் தொடர வாய்ப்பு உள்ளது.
இதேவேளை, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்க சம்மதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ட்ரம்பின் முக்கிய நிபந்தனை என்றும் அதில் எந்தத் தளர்வும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைகள் விரைவில் இஸ்லாமாபாத் நகரில் நடைபெறவுள்ளன. இதில் அமெரிக்கா சார்பில் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






3 Comments