நேட்டோ அமைப்பில் உள்ள உறுப்புநாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடும் அதிருப்தியில் இருப்பதாக அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நடைபெற்ற மூடிய அறை சந்திப்புக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ட்ரம்ப் நேட்டோ கூட்டமைப்பின் செயல்பாடுகள் குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளதாக கூறினார்.
“எங்களுக்குத் தேவைப்பட்டபோது நேட்டோ எங்களோடு இருக்கவில்லை; இனி தேவைப்படும்போதும் அவர்கள் இருக்கமாட்டார்கள்” என ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், டென்மார்க் கட்டுப்பாட்டிலுள்ள கிரீன்லாந்து தீவை அமெரிக்காவுடன் இணைக்க எடுத்த முயற்சிக்கு நேட்டோ நாடுகள் எதிர்ப்பு தெரிவித்ததை அவர் மீண்டும் சுட்டிக்காட்டியதுடன், கிரீன்லாந்தின் நிர்வாகத்தையும் விமர்சித்துள்ளார்.
இதேவேளை, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்ட அண்மைய தாக்குதல்கள் உலகை மேலும் பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக மார்க் ரூட்டே நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு வெளிப்படையானதாக இருந்ததாகவும், சில நேட்டோ நாடுகள் குறித்து அமெரிக்கா அதிருப்தி கொண்டுள்ளது தெளிவாக தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பு மற்றும் எதிர்கால உறவுகள் குறித்து சர்வதேச அளவில் புதிய விவாதங்கள் எழுந்துள்ளன.






3 Comments