பிரித்தானியாவின் வடக்கு கடல் பகுதியில் அமைந்துள்ள முக்கிய இணைய கேபிள்கள் மற்றும் எரிவாயு குழாய்களை இலக்கு வைத்து, ரஷ்யாவின் மூன்று நீர்மூழ்கிக் கப்பல்கள் இரகசிய உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாக பிரித்தானிய பாதுகாப்புச் செயலாளர் ஜான் ஹீலி எச்சரித்துள்ளார்.
இந்த நடவடிக்கை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தலைமையிலான “தீய முயற்சி” எனக் குறிப்பிடப்பட்ட நிலையில், அதனை முறியடிக்க பிரித்தானியாவின் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் உடனடியாக நிலைநிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
“நாங்கள் உங்களை கண்காணித்து வருகிறோம். எமது முக்கிய உட்கட்டமைப்புகளை சேதப்படுத்த முயன்றால் கடுமையான விளைவுகள் ஏற்படும்,” என ஹீலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரித்தானியாவின் தரவுப் பரிமாற்றத்தில் சுமார் 90% கடல்சார் இணைய கேபிள்கள் மூலமாக நடைபெறுகின்றது. மேலும், நாட்டிற்குத் தேவையான எரிவாயுவில் 77% நோர்வேயிலிருந்து கடலடிக் குழாய்கள் வழியாக கிடைக்கிறது.
இந்நிலையில், ரஷ்யாவின் ‘ஜியூஜிஐ’ எனப்படும் இரகசிய ஆழ்கடல் ஆராய்ச்சி பிரிவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்த உளவு நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறப்படுவது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.






3 Comments