வொஷிங்டனில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள லெபனான் அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தையில் ஹிஸ்புல்லா அமைப்புடன் போர் நிறுத்தம் குறித்து எந்தவித விவாதமும் நடத்தப்படமாட்டாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மற்றும் உயர்மட்ட அதிகாரிகளின் அழுத்தத்தையடுத்து, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14) அமெரிக்க வெளியுறவுத் திணைக்களத்தில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
இஸ்ரேலிய தூதுவர் யெச்சியல் லெயிட்டர் மற்றும் லெபனான் தூதுவர் நடா ஹமாதே ஆகியோர் இதில் பங்கேற்க உள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே அதிகாரப்பூர்வ இராஜதந்திர உறவுகள் இல்லாத நிலையில், இது முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
எனினும், ஹிஸ்புல்லாவை பயங்கரவாத அமைப்பாகக் கருதும் இஸ்ரேல், அந்த அமைப்பை ஆயுதமற்றதாக்குவதே தனது முக்கிய இலக்கு என்பதால் சமரசம் செய்யப்போவதில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், சமீப நாட்களில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே ஏற்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என இரு தரப்பும் தெரிவித்துள்ளன.
மறுபுறம், லெபனான் தாக்குதல்கள் தொடர்ந்தால் பேச்சுவார்த்தையில் பங்கேற்கமாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம், எந்த விட்டுக்கொடுப்புகளையும் செய்யக்கூடாது என லெபனான் அரசை வலியுறுத்தியுள்ளார் இந்த பதற்றமான சூழ்நிலையில் நடைபெறவுள்ள வொஷிங்டன் பேச்சுவார்த்தை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது.






3 Comments