ஆர்த்தடாக்ஸ் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ரஷியா – உக்ரைன் இடையிலான போரில் தற்காலிக போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில், இரு நாடுகளும் தலா 175 போர் கைதிகளை சனிக்கிழமை பரஸ்பரம் பரிமாறிக்கொண்டன.
உக்ரைனின் 175 ராணுவ வீரர்களுடன் 7 பொதுமக்களும் விடுவிக்கப்பட்டதாக அந்த நாட்டின் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இவர்கள் பெரும்பாலானோர் 2022ஆம் ஆண்டு முதல் ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என கூறப்படுகிறது.
இக்கைதிகள் பரிமாற்றம் ஐக்கிய அரபு அமீரகம் நாட்டின் மத்தியஸ்தத்துடன் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரஷியாவும் தனது 175 ராணுவ வீரர்களையும், குர்ஸ்க் பகுதியைச் சேர்ந்த 7 பொதுமக்களையும் மீட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் நிலப்பரப்பு தொடர்பான கருத்து வேறுபாடுகளால் மந்தமாக இருந்தாலும், போரில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒப்படைப்பு மற்றும் கைதிகள் பரிமாற்றம் போன்ற மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.
மேலும், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ மரபின்படி ஏப்ரல் 12ஆம் தேதி கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, சனிக்கிழமை மாலை 4 மணி முதல் 32 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷியா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






3 Comments