ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூர் மாவட்டம், ராம்நகர் மலைப் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 29 பேர் காயமடைந்துள்ளனர்.
காவல் துறை தகவலின்படி, திங்கள்கிழமை காலை சுமார் 10 மணியளவில் 50 பயணிகளுடன் உதம்பூர் நோக்கி சென்ற தனியார் பேருந்து, காக்ரோட் மலைக் கிராமம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த ஆட்டோவுடன் மோதியது. அதன் பின்னர் பேருந்து மலைச் சரிவில் சுமார் 100 மீட்டர் ஆழமான பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் 15 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் போது உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு 21 ஆக உயர்ந்தது. ஆட்டோவில் பயணித்தவர்கள் உள்பட 29 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேருந்து முழுமையாக சேதமடைந்ததால் மீட்பு பணிகள் கடினமாக இருந்ததாகவும், உள்ளூர் போலீஸ் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக உதம்பூர்-ரியாசி மண்டல காவல் துறை டிஐஜி சிவ் குமார் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துக்கு திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி தனது அறிக்கையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000மும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் ஒமர் அப்துல்லா உள்ளிட்டோரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.






3 Comments