தைவான் ஜனாதிபதி லாய் சிங்-டே, எஸ்வாடினி நோக்கி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த தனது அரசுப் பயணத்தை ரத்து செய்துள்ளார். இதற்கு சீனா பிற நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்து விமான அனுமதிகளைத் தடுக்க முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தைவான் அதிகாரிகள் தெரிவித்ததன்படி, சீஷெல்ஸ், மொரீஷியஸ் மற்றும் மடகாஸ்கர் ஆகிய நாடுகள், சீனாவின் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தத்தினால், லாய் சிங்-டே பயணிக்கும் விமானத்திற்கு தங்களது வான்வழி அனுமதிகளை ரத்து செய்தன.
இதனால், விமான அனுமதி மறுக்கப்பட்டதால் தைவான் தலைவரின் வெளிநாட்டு பயணம் ரத்து செய்யப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக சுவாசிலாந்து என அழைக்கப்பட்ட எஸ்வாடினி, ஆப்பிரிக்காவில் தைவானின் ஒரே தூதரக கூட்டாளியாகும். உலகளவில் தைவானை அங்கீகரித்துள்ள 12 நாடுகளில் இதுவும் ஒன்று.
தைவானை தனித்துவமான நாட்டாக பலர் கருதினாலும், சீனா “ஒரே சீனா” கொள்கையின் அடிப்படையில் தைவானை தனது பிரிக்கப்பட்ட மாகாணமாகக் கருதுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக லாய் சிங்-டே, சீனாவின் “கட்டாய நடவடிக்கைகள்” சர்வதேச ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளதாக விமர்சித்துள்ளார். அதேசமயம், உலகத்துடன் தைவான் தொடர்ந்தும் தொடர்பு கொள்ளும் உறுதியை எந்த அழுத்தமும் மாற்றாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எஸ்வாடினி அரசு, இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்துள்ளதுடன், இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால உறவில் மாற்றம் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.
இந்த பயணத்தின் போது, மூன்றாம் மஸ்வாதி அவர்களின் ஆட்சியின் 40ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்வில் தைவான் ஜனாதிபதி பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.






3 Comments