இஸ்ரேல் மற்றும் ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பிற்கிடையே நீடிக்கப்பட்டுள்ள புதிய போர்நிறுத்த ஒப்பந்தம் மோதல்களை முழுமையாகக் கட்டுப்படுத்துமா என்பது தொடர்பில் சந்தேகம் இருப்பதாக ஐக்கிய நாடுகளுக்கான இஸ்ரேலிய தூதுவர் டேனி டானன் தெரிவித்துள்ளார்.
லெபனான் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் ஹிஸ்புல்லா அமைப்பு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை பாதிக்கும் வகையில் ஹிஸ்புல்லா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் இஸ்ரேல் அதற்குத் தகுந்த பதிலடி வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய ஒப்பந்தம் நூறு சதவீதம் வெற்றிகரமாக அமையும் என்று உறுதியாகக் கூற முடியாது என்றும், இருப்பினும் லெபனான் ராணுவம் இந்த போர்நிறுத்தத்தை முறையாக அமுல்படுத்தும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவில் உள்ள வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் மற்றும் லெபனான் தூதுவர்கள் சந்தித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே நடைமுறையில் இருந்த 10 நாள் போர்நிறுத்தத்தை மேலும் மூன்று வாரங்களுக்கு நீடிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார் இந்த நிலையிலேயே ஐ.நா. தூதுவர் டேனி டானனின் இந்த கருத்து வெளியாகியுள்ளது.






3 Comments