ஐக்கிய அரபு எமிரேட்ஸின் புஜைரா பகுதியில் இடம்பெற்ற தாக்குதலில் மூன்று இந்தியர்கள் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் பெட்ரோலிய தொழில்துறை மண்டலத்தில் ஏற்பட்ட தீவிபத்துடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஈரான் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களின் நிலை மிதமானதாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட பதிவில் தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளார். பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளை குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், இந்தியா ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உடன் ஒற்றுமையாக நிற்பதாகவும், பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழியில் அமைதியான தீர்வு காண வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பாதுகாப்பான மற்றும் தடையற்ற கப்பல் போக்குவரத்து பிராந்திய மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பிற்கு முக்கியமானது எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.






3 Comments