ஜெர்மனியின் லைப்சிக் விமான நிலையத்தில் ரஷ்யாவால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தோல்வியடைந்த ஆளில்லா விமானத் தாக்குதல் முயற்சிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரித்துள்ளன.
பிரஸ்ஸல்ஸில் நடைபெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய ஒன்றியப் பிரதேசத்தில் இராணுவத் தரத்திலான வெடிபொருட்களைப் பயன்படுத்தி ரஷ்ய முகவர்களால் இந்தத் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக குற்றஞ்சாட்டினார்.
ரஷ்யாவின் இத்தகைய நடவடிக்கைகளை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்த அவர், அதற்கு விரைவாகவும் வலுவாகவும் பதிலளிக்க ஐரோப்பா தயாராக வேண்டும் என வலியுறுத்தினார்.
இதேவேளை, நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே, இந்த விவகாரத்தில் ஜெர்மனிக்கு நேட்டோ அமைப்பின் முழுமையான ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 4ஆம் திகதி லைப்சிக் விமான நிலையத்தில் யுக்ரைனுக்குச் சொந்தமான சரக்கு விமானத்தை இலக்காகக் கொண்டு வெடிபொருட்களுடன் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் ஆளில்லா விமானமொன்று ரோபோ உதவியுடன் செயலிழக்கச் செய்யப்பட்டது. மேலும், இரண்டு ஆளில்லா விமானங்களும் கண்டெடுக்கப்பட்டன.
இந்தச் சம்பவத்தின் பின்னணியில் ரஷ்ய உளவுத்துறையும் அதன் முகவர்களும் இருப்பதை உளவுத்துறை அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது. இதனையடுத்து, பான்னில் உள்ள ரஷ்ய தூதரகத்தையும் பெர்லினில் இயங்கி வந்த ‘ரஷ்யன் ஹவுஸ்’ பண்பாட்டு மையத்தையும் மூட ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
மேலும், ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதுடன், கூடுதல் பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்தும் ஐரோப்பிய நாடுகள் பரிசீலித்து வருகின்றன.
எனினும், ஜெர்மனி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ரஷ்யா முற்றிலும் மறுத்துள்ளது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஜெர்மனி எடுத்துள்ள முடிவுகள் மிகப்பெரிய தவறு எனத் தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அதற்கு உரிய பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, லைப்சிக் சம்பவத்திற்கு அப்பால் ஜெர்மனியின் மின் நிலையங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் போலந்தில் உள்ள ஆளில்லா விமான உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து உள்ளிட்ட சம்பவங்களின் பின்னணியிலும் வெளிநாட்டுச் சதி இருக்கக்கூடும் என ஐரோப்பிய அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் இத்தகைய ‘ஹைப்ரிட்’ தாக்குதல்களுக்கு எதிராக ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.






3 Comments