கிழக்கு பசிபிக் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று கப்பல்களை மூழ்கடித்த அமெரிக்காவின் நடவடிக்கைக்கு ஈக்வடோர் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், குறித்த ஈக்வடோர் கப்பல்களை அமெரிக்கா தடுத்து மூழ்கடித்த நடவடிக்கை, குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளை இலக்காகக் கொண்டு வாஷிங்டனுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் ஒரு பகுதியாகும் என ஈக்வடோர் அரசு தெரிவித்தது.
ஈக்வடோர் உள்துறை அமைச்சர் ஜோன் ரெய்ம்பெர்க், குறித்த கப்பல்கள் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவை நோக்கி போதைப்பொருட்களை கடத்திச் செல்லும் அதிவேக படகுகளுக்கு கடலில் எரிபொருள் வழங்கும் நிலையங்களாகச் செயல்பட்டதாக Teleamazonas ஊடகத்திடம் தெரிவித்துள்ளார் இது சர்வதேச ஒத்துழைப்பின் மூலம் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை” என ரெய்ம்பெர்க் குறிப்பிட்டார்.
இதனிடையே, அமெரிக்காவின் தெற்கு கட்டளைப் படையான SOUTHCOM, ரெய்ம்பெர்க்கின் கூற்றை உறுதிப்படுத்தும் வகையில், சட்டவிரோதமான கடல் வழி போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக மிதக்கும் எரிபொருள் நிலையமாகச் செயல்பட்ட கப்பல் ஒன்றை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை Los Choneros என்ற குற்றக் கும்பலுடன் தொடர்புடையதாகவும் SOUTHCOM கூறியுள்ளது.
கப்பலில் இருந்தவர்களை பாதுகாப்பாக ஈக்வடோர் அதிகாரிகளிடம் ஒப்படைத்த பின்னர், உரிய சோதனைகள் நிறைவடைந்ததும் அமெரிக்கப் படைகள் அந்தக் கப்பலை கடலில் மூழ்கடித்ததாக SOUTHCOM தெரிவித்துள்ளது.
இதற்கான காணொளி ஒன்றையும் அமெரிக்க தெற்கு கட்டளைப் படை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கப் படையினர் கப்பலை அணுகி அதில் ஏறுவதும், பின்னர் அந்தக் கப்பல் கடலில் வெடித்துச் சிதறுவதும் காணப்படுகின்றன.
எனினும், அந்தக் காணொளி எப்போது, எங்கு பதிவு செய்யப்பட்டது என்பது சுயாதீனமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






3 Comments